கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்


கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும்
x
தினத்தந்தி 30 Sept 2021 6:26 PM IST (Updated: 30 Sept 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

வரதமாநதி அணை-கருங்குளம் இடையே கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திண்டுக்கல்:

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருப்பதால், கடந்த சில மாதங்களாக கலெக்டர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் தொற்று பரவல் குறைந்து வருவதையடுத்து குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். 

கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் விளக்கமளித்தார். அப்போது பரப்பலாறு அணையை தூர்வார அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கால்வாய் பணி

அதையடுத்து விவசாயிகள் தங்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்து விவாதம் நடத்தினர். அப்போது அழகியன்னன் என்ற விவசாயி பேசுகையில், வரதமாநதி அணையில் இருந்து சத்திரப்பட்டி பகுதியில் உள்ள கருங்குளத்துக்கு கால்வாய் அமைக்கும் பணிக்காக பல்வேறு கட்ட ஆய்வு நடத்தப்பட்டு அரசுக்கு அது குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கால்வாய் அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. எனவே விரைவாக அந்த பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், விரைவில் கால்வாய் அமைக்கும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து நாகராஜன் என்ற விவசாயி, ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்களை விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றார். 

இதற்கு பதிலளித்து பேசிய கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், விவசாயம் சார்ந்த சில பணிகள் ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் அது குறித்து கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தொழிற்சாலை கழிவுகள்

அவரை தொடர்ந்து சூசை மாணிக்கம் என்ற விவசாயி பேசுகையில், திண்டுக்கல்லில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைவதுடன், நிலத்தடி நீரில் உப்புத்தன்மை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே தோல் தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்றார்.

 மேலும் குடகனாறு தண்ணீர் பிரச்சினையில் நிபுணர்கள் குழு தாக்கல் செய்த அறிக்கையை வெளியிட வேண்டும். இதற்கு பதிலளித்து பேசிய கலெக்டர், கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
---------

Next Story