கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 109 பேர்கைது


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 109 பேர்கைது
x
தினத்தந்தி 30 Sept 2021 6:27 PM IST (Updated: 30 Sept 2021 6:27 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் 109 பேரை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுட்ட கிராம மக்கள் 109 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் ஆக்கிரமிப்பிலுள்ள அரசு பொது இடங்களை மீட்க கோரி இந்த போராட்டம் நடந்தது.
டிராக்டர்களில் வந்த கிராம மக்கள்
ஓட்டப்பிடாரம் அருகே கலப்பைப்பட்டி கிராம மக்கள், நாட்டாமைகள் முருகன், வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் நேற்று காலையில் 5 டிராக்டர்களில் கருப்புக் கொடிகளுடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்துக்குள் டிராக்டர்களுடன் செல்ல முயன்றனர். அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி, சங்கர், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் உதவி கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
சாலைமறியல்
அப்போது, அவர்கள் கலப்பைப்பட்டியில் பொது பயன்பாட்டுக்கு உள்ள அரசு இடத்தில் உள்ள தனிநபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி கோஷம் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நாட்டாமைகள் உள்ளிட்ட 5 பேரை மட்டும் உதவி கலெக்டர் சங்கரநாராயணனை சந்திக்க போலீசார் அனுமதித்தனர்.
இதையடுத்து, அவர்கள் உதவி கலெக்டரை  சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். 
கோரிக்கை
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கலப்பைப்பட்டி கிராமத்தில் உள்ள 2¼ ஏக்கர் அரசு இடம் நத்தம் என்று அடங்கல், வரைபடம் உள்ளிட்ட, அனைத்து வருவாய் ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது உபயோகத்துக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் விளையாட்டு மைதானம், கால்நடை மருத்துவமனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, சிறுவர் பூங்கா, பயணிகள் நிழற்கூடம் போன்றவை கட்டித்தர வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், எங்கள் ஊரைச்சேர்ந்த சில தனிநபர்கள் சட்டத்துக்கு முரணாக அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்து, அரசு இடத்தை தங்களுக்கு மட்டும் சொந்தமான இடம் என்ற முறையில் சுற்றுச்சுவர் எழுப்பி, வீடு கட்டியும், மாட்டு தொழுவம் அமைத்தும் மக்களுக்கான பொதுவான பாதையையும் ஆக்கிரமிப்பு செய்து, கட்டிடம் கட்டி வருகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆகவே பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவித தடையுமில்லை. யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. கலப்பைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களை மீட்பது தொடர்பாக ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.
109 பேர் கைது
மனுவை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர், போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உதவி கலெக்டர் கூறிய சமாதானத்தை ஏற்க கிராம மக்கள் மறுத்து போராட்டத்தை தொடர்வதாக அறிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 61 பெண்கள் உள்பட 109 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story