போலீசாரின் ரோந்து பணியை கண்காணிக்க ‘இ-பீட்’ செயலி அறிமுகம்


போலீசாரின் ரோந்து பணியை கண்காணிக்க ‘இ-பீட்’ செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 30 Sept 2021 7:28 PM IST (Updated: 30 Sept 2021 7:28 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்து பணியை கண்காணிக்க ‘இ-பீட்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்:

‘இ-பீட்’செயலி

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நகர், புறநகர் பகுதிகளில் பகல், இரவு என 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் இடங்கள் பல்வேறு ‘பீட்’களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ‘பீட்’களிலும் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருக்கும். இந்த புத்தகத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் கையொப்பமிட்டு, எந்த நேரத்தில் அந்த பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டோம் என்பதையும் குறிப்பிடுவார்கள்.

இந்த நிலையில் போலீசார் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ‘பீட்’ பகுதிகளில் முறையாக ரோந்து பணியில் ஈடுபடுகின்றனரா? என்பதை கண்காணிக்க மாவட்டத்தில் முதல் முறையாக ‘இ-பீட்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கான தொடக்க நிகழ்ச்சி வடக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் நேற்று நடந்தது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி, ‘இ-பீட்’ செயலியை தொடங்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா, துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன், உதவி சூப்பிரண்டு அருண்கபிலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

441 இடங்களில்...

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், திண்டுக்கல் நகர் பகுதியில் 129 இடங்கள், புறநகர் பகுதியில் 312 இடங்கள் என மொத்தம் 441 இடங்களில் ‘இ-பீட்’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

விரைவில் மாவட்டம் முழுவதும் 1,508 இடங்களில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படும். செயலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 441 இடங்களில் உள்ள ‘பீட்’களில் கியூ ஆர் கோர்டு ஒட்டப்படும்.

அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் அந்த கியூ ஆர் கோர்டை தங்கள் செல்போனில் உள்ள ‘இ-பீட்’ செயலி மூலம் ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும். அப்போது எந்த போலீசார், எங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை எளிதாக தெரிந்துகொள்ள முடியும் என்றார்.

Next Story