பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டம்
ஊட்டியில் ரூ.1½ கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஊட்டி
ஊட்டியில் ரூ.1½ கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் அதிகமாக வருவார்கள். அப்போது ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மலைப்பகுதி என்பதால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
இடம் தேர்வு
ஊட்டி நகரில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இதனை கருத்தில் கொண்டு ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி(பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்) ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டும், திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை மூலம் ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.1 கோடியே 40 லட்சம்
ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்பட இருக்கிறது. ஹைட்ராலிக் முறை மூலம் கார்கள், இருசக்கர வாகனங்கள், சுற்றுலா பஸ்கள் நிறுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சாலையோரங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அருகே வாகனங்கள் நிறுத்தப்படுவது குறையும்.
மல்டி லெவல் பார்க்கிங் தளத்தை சுற்றி கடைகள் அமைக்கப்படும். கட்டண முறையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படும். முதல் கட்டமாக வருவாய்த்துறையிடம் இருந்து அந்த நிலத்தை நகராட்சி பெற உள்ளது. தொடர்ந்து அரசு அனுமதி பெற்று விரைவில் மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டியில் மல்டி லெவல் பார்க்கிங் அமைந்தால் நகரின் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story