14 ரவுடிகள் சிறையில் அடைப்பு
தேனி மாவட்டத்தில் 14 ரவுடிகளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
தேனி:
தமிழகத்தில் ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 70-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 52 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து அடுத்த 6 மாத காலத்திற்கு எந்த பிரச்சினைகளில் ஈடுபடக்கூடாது என சுயஉறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிய பின்னர் அவர்கள் நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் செயல்பாடுகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரையிலான ஒரு வார காலத்தில் 7 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மேலும் 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று கைதான ரவுடிகளில் ஒருவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். 3 பேர் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர்கள். 2 பேர் நன்னடத்தை உறுதிமொழியை மீறி பொதுஅமைதிக்கு எதிராக செயல்பட்டவர்கள், ஒருவர் தனது வீட்டில் ஆயுதங்கள் வைத்திருந்தவர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் 14 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் மற்றவர்களின் செயல்பாடுகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story