தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல்:
வேடசந்தூர் தாலுகா கூம்பூரில் குடகனாற்றின் குறுக்கே பாலம் அமைந்து உள்ளது. இதன் அருகில் ஆறு முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து விட்டதால் புதர் மண்டி காணப்படுகிறது. அதோடு குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் குடகனாறு பாழாகி வருகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்றுவதோடு, குப்பைகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். - நாகராஜன், தொன்னிக்கல்பட்டி.
பள்ளி மாணவர்கள் தவிப்பு
நத்தம் தாலுகா செந்துறையில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் மல்லநாயக்கன்பட்டி உள்ளது. இந்த ஊருக்கு செல்லும் வழியில் காமாட்சிபுரம், பெரியூர்பட்டி, பெரிய கோவில்பட்டி உள்பட 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் செந்துறையில் உள்ள பள்ளிகளுக்கு படிக்க வருகின்றனர். ஆனால் அங்கு செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் தவித்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன்கருதி பஸ்களை இயக்க வேண்டும். -தங்கபாண்டியன், மல்லநாயக்கன்பட்டி.
சாலை அகலப்படுத்த வேண்டும்
பழனி அருகே உள்ள கீரனூர் பஸ்நிலையத்தில் இருந்து நால்ரோடு வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. மேலும் சாலை ஓரத்தில் மக்கள் நடைபயிற்சி கூட செல்ல முடியவில்லை. எனவே சாலையை விரிவாக்கம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனாவுல்லா, கீரனூர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
தேனி அருகே அன்னஞ்சி பாலாஜிநகரில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. ஒருசில இடங்களில் வீட்டு சுவர்களை உரசியபடி அவை செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்சார கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும். -வேல், அன்னஞ்சி.
தடுப்புச்சுவர் இல்லாத கிணறு
குஜிலியம்பாறை ஒன்றியம் கருங்கல் ஊராட்சி தண்ணீர்பந்தல் கிராமத்தில் இருந்து சின்னழகுபுரத்துக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் இல்லாத கிணறு உள்ளது. இதனால் பெரும் விபத்து நடைபெறும் அபாயம் உள்ளது. இதை முன்கூட்டியே தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆறுமுகம், கருங்கல்.
ஆபத்தான இரும்பு கம்பி
தேனி மாவட்டம் சின்னமனூர் பிரதான சாலையில் தங்கப்பநாடார் தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் இரும்பு கம்பி உள்ளது. பலத்த காற்று வீசும் நேரத்தில் அது விழுந்து விடும் வாய்ப்பு உள்ளது. மேலும் அது யார் மீதாவது விழுந்து விட்டால் ஆபத்தாகி விடும். சாய்ந்த கம்பியை அகற்ற வேண்டும். -சிவாஜி, சின்னமனூர்.
சாலை வசதி தேவை
நிலக்கோட்டை அன்னைநகரில் சாலை வசதி இல்லாததால், தெருக்கள் அனைத்தும் மண் பாதையாக உள்ளது. இதனால் சாரல் மழை பெய்தால் கூட தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு சாலை வசதி செய்து தரவேண்டும். -சதீஷ்குமார், நிலக்கோட்டை.
எரியாத தெருவிளக்குகள்
பெரியகுளம் தென்கரையில் கண் மருத்துவமனை எதிரே உள்ள பகுதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்க தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -ராமகிருஷ்ணன், பெரியகுளம்.
Related Tags :
Next Story