நாம் தமிழர் கட்சியை பார்த்து திராவிட கட்சிகள் பயப்படுகின்றன சீமான் பேச்சு


நாம் தமிழர் கட்சியை பார்த்து திராவிட கட்சிகள் பயப்படுகின்றன சீமான் பேச்சு
x
தினத்தந்தி 30 Sept 2021 10:24 PM IST (Updated: 30 Sept 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சியை பார்த்து திராவிட கட்சிகள் பயப்படுகின்றன என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்

கள்ளக்குறிச்சி

வேட்பாளர் அறிமுக கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

திராவிட கட்சிகள் பயப்படுகின்றன

தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். உள்ளாட்சி மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். 
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 லட்சம் வாக்குகளையும், 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியை பார்த்து திராவிட கட்சிகள் பயப்படுகின்றன.

 தரம் உயர்த்தப்படும்

பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் அதிக நேரம் செலவிடும் ஒரே இனம் தமிழினம் தான். சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் இல்லை. ஆனால் இந்த நாடுகள் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்குகின்றன. 
வேளாண்மையை கைவிட்ட நாடு பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பை அரசு பணியாக்குவோம். மண்பாண்ட தொழிலாளர்களை பேராசிரியர்களாக உருவாக்குவோம். நாட்டில் படிக்காதவர்களே இல்லை என்பது உறுதிபடுத்தப்படும்.
அரசு பள்ளி மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டாட்சிக்கு எதிரானது

மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு மாற்றி விட்டு எதற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க வேண்டும்? வசூலித்த நிதியை மாநிலங்களின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வழங்கவில்லை. ஜி.எஸ்.டி.வரி என்பது தமிழக நிதி அமைச்சர் கூறுவது போல் கூட்டாட்சிக்கு எதிரானது.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சுங்கச்சாவடிகளால் கொஞ்சம் பேரை தான் சாகடித்து உள்ளனர், கூடுதலாக 6 சுங்கச்சாவடியை அமைத்து இன்னும் கொஞ்சம் பேரை சாகடிக்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story