வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 252 பதற்றமான வாக்குக்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 252 பதற்றமான வாக்குக்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வருகிற 6, 9-ந் தேதிகளில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2,151 உள்ளாட்சி பதவிகளுக்கு 6,547 பேர் போட்டியிடுகிறார்கள். வாக்குச்சீட்டுகள் அச்சிடுவது, வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை தயார் செய்வது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் 7 லட்சத்து 16 ஆயிரத்து 984 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 1,331 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 140 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 252 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும்.
பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல்படையினர் உள்பட 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலின்போது அசம்பாவிதம், கலவரம் ஏற்படாமல் இருக்க பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டு கண்காணிக்க உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 1,200 போலீசாரும், 160 ஊர்க்காவல் படையினரும் உள்ளனர். தேர்தல் பணியில் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே பிறமாவட்டங்களில் உள்ள ஊர்க்காவல்படையினர், போலீசார் என்று 700 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத வடக்கு மண்டல போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, கடலூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வருகிற 3-ந் தேதியும், ஊர்க்காவல் படையினர் வருகிற 5-ந் தேதியும் வேலூருக்கு வர உள்ளனர். 252 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் போலீசார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story