திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் மனைவி மாமியாருக்கு சரமாரி கத்திகுத்து


திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் மனைவி மாமியாருக்கு சரமாரி கத்திகுத்து
x
தினத்தந்தி 30 Sept 2021 11:10 PM IST (Updated: 30 Sept 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் சரமாரியாக குத்திவி்ட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

திருக்கோவிலூர்

நடத்தையில் சந்தேகம்

திருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சுரேஷ்(வயது 30). இவருக்கும் திருக்கோவிலூர் அருகே உள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பவானி(25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பவானியின் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இது குறித்து பவானி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் கணவன்-மனைவி இருவரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தியதோடு பவானி ஒரு மாதம் அவரது தாய் வீட்டில் இருந்துவிட்டு பின்னர் குடும்பம் நடத்த வீட்டுக்கு வருவார் என இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சரமாரி கத்திகுத்து

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் சுரேஷ் பவானியை அழைத்துச் செல்வதற்காக குலதீபமங்கலம் கிராமத்துக்கு வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பவானி மற்றும் அவரது தாய் பூங்காவனம் ஆகியோரை சத்தம்போட்டு அழைத்தார்.  ஆனால் யாரும் பதில் சொல்லாததால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் எடுத்து வைத்திருந்த கத்தியால் பூங்காவனத்தை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்கமுடியாமல் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்து தடுக்க முயன்ற பவானியையும் அவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தாய்-மகள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இது குறித்த புகாரின் பேரில்  மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கொலைமுற்சி வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக உள்ள சுரேசை வலைவீசி தேடி வருகிறார். 


Next Story