விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
வாக்காளர் பட்டியலில் 40 பேரை நீக்கி குளறுபடி செய்ததாக கூறி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் 40 பேரின் பெயர்களை நீக்கியும், உரிய வயது வரம்பு இல்லாத, தகுதியற்ற சிலரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தும் குளறுபடி செய்துள்ளதாக கூறி விக்கிரவாண்டி ஒன்றியம் ஈச்சங்குப்பம் ஊராட்சி ஒன்றிய 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்விமணி, ஈச்சங்குப்பம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் சக்குபாய் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
இவர்கள் அனைவரும் தேர்தல் அதிகாரியை கண்டித்து கோஷம் எழுப்பியபடி திடீரென கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்திய போலீசாரிடம், நீக்கப்பட்ட 40 பேரின் பெயர்களை உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், இல்லையெனில் எங்களுடைய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதோடு மட்டுமின்றி தேர்தலையும் புறக்கணிப்போம் என்று கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதம் செய்தனர்.
தர்ணா போராட்டம்
பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். அதன் பிறகு அவர்களில் குறிப்பிட்ட 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மாவட்ட கலெக்டர் டி.மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊராட்சியில் 40 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திடீரென நீக்கம் செய்தும், புதியதாக தகுதியற்ற, அதாவது உரிய வயது வரம்பு இல்லாத, எங்கள் ஊராட்சிக்கு சம்பந்தமே இல்லாத புதிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். அரசியல் அழுத்தம் காரணமாக ஒருதலைபட்சமாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் ஊராட்சியில் பாரபட்சமற்ற தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் டி.மோகன் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story