கூட்டணியில் விரும்பும் தொகுதிகள் கிடைப்பதில்லை


கூட்டணியில் விரும்பும் தொகுதிகள் கிடைப்பதில்லை
x
தினத்தந்தி 30 Sept 2021 11:30 PM IST (Updated: 30 Sept 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

கூட்டணியில் விரும்பும் தொகுதிகள் கிடைப்பதில்லை என்று விழுப்புரத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார்.  மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் அகில இந்திய செயலாளர் சிரிவெல்லபிரசாத், மாநில துணைத்தலைவர்கள் குலாம்மொய்தீன், பொன்.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய உறுப்பினர் சிறுவைராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் தயானந்தம், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்ராம், சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர். 
முன்னதாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொள்கை முடிவு

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. கூட்டணி என்று வந்தாலே எல்லா கட்சியிலும் விரும்புகிற அளவுக்கு தொகுதிகள் கிடைப்பதில்லை. குறைபாடு என்பது எல்லோரின் மனதிலும் இருக்கும். கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதைப்பற்றி பேசக்கூடாது. 
தேர்தல் வெற்றிக்காக மட்டுமே ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். நாங்கள் எங்கள் கட்சி செயல்வீரர்களின் விருப்பத்தின்பேரில் கொள்கை முடிவோடுதான் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம். நாங்கள் மதசார்பின்மை என்ற ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறோம்.

உட்கட்சி தேர்தல் 

காங்கிரஸ் தலைவர்களை உட்கட்சி தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான நிர்வாகிகளின் நம்பிக்கையை பெற்றவர்கள். சோனியாவை தற்காலிக தலைவர் என கூறுவது அறிவார்ந்த செயல் அல்ல. தற்காலிக செயல் மட்டுமே. 
மக்கள் மனதில் இடம் பிடிப்பவரே தலைவர்கள். அதுபோல்தான் தற்போது காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளனர். அவர்களை தற்காலிக தலைவர் எனக்கூறி அதை பொது வெளியில் கூறுவது பா.ஜ.க.வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சொல்வது, அது தவறாகும். தற்காலிக தலைவர் என கூறிய கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்திரா, சோனியா, ராகுல் ஆகியோருக்கு எதிராக யார் பேசினாலும் அதை தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜ.க. அதிகாரத்தில் இருப்பதால் தலைவர்களை மாற்றும்போது எந்த சலசலப்பும் இல்லை. நாங்கள் அதிகாரத்தில் இல்லாததால் சிறு, சிறு சலசலப்புகள் வருகிறது.
சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது
தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கோடநாடு கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்காத எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று பேசுவது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story