வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யாத பள்ளி பஸ்களின் உரிமங்கள் ரத்து. வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை


வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யாத பள்ளி பஸ்களின் உரிமங்கள் ரத்து. வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Sept 2021 11:38 PM IST (Updated: 30 Sept 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யாத பள்ளி, கல்லூரி பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாணியம்பாடி

வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யாத  பள்ளி, கல்லூரி பஸ்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி பஸ்கள் ஆய்வு

நவம்பர் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுபள்ளியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரி மைதானத்தில் முதல் கட்டமாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் 75 பஸ்கள் ஆய்வுக்காக கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. 

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் என்.ராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன், அமர்நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் பஸ்களை ஆய்வு செய்தனர், 
ஆய்வின்போது 25 பஸ்களில் போதுமான பாதுகாப்பு வசதி, முதலுதவி பெட்டிகள் அமைக்கப்படாதது மற்றும்  பல்வேறு குறைபாடுகளை சரிசெய்து மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், மீண்டும் இந்த வாகனங்கள் 15 நாட்களில் அதன் குறைகளை நிவர்த்தி செய்து ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். 

உரிமங்கள் ரத்து

தொடர்ந்து பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கான சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது, இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி பேசுகையில், பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் போது மிகவும் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும், மாணவர்களை ஏற்றிச் செல்லும் போது அதற்கான நடத்துனர்கள் முறையாக மாணவ, மாணவிகளை ஏற்றி இறக்கி விட வேண்டும். தற்போது கூறப்பட்டுள்ள குறைகள் அனைத்தையும் வாகனங்களுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு குறைகளை நிவர்த்தி செய்யாத வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யாத வாகனங்களின் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 
கூட்டத்தில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டு பேசினர்.

Next Story