தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
உடனடி நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சி 12-வது வார்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பிடம் உள்ளது. அனைத்து வேலைகளும் முடிவுற்ற நிலையில் 3 ஆண்டுகள் ஆகியும் இந்த கழிப்பிடம் திறக்கப்படவில்லை என்று நேற்று (30-ந் தேதி) காலை ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தியாக வெளியானது. இந்த செய்தி வெளியான உடனே அந்த நவீன கழிப்பிடம் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிட்டனர். பொது கழிப்பிடம் உடனடியாக திறக்க உத்தரவிட்ட அதிகாரிகளுக்கும், அதற்காக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
-மோகனவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் பேரூராட்சி 1-வது வார்டு வடக்கு தெருவில் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் குழாய் பழுதடைந்து உள்ளது என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் அந்த பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் ‘தினத்தந்தி’க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
-த.ரமேஷ், வீரகனூர், சேலம்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் எருமாபாளையம் சர்வீஸ் ரோட்டில் லட்சுமிபுரம் அருகில் ரோட்டின் ஓரமாக குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் அடிப்படையில் குப்பைகளை அகற்றிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் ஊர்மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
-தீபக், எருமாபாளையம், சேலம்.
=====
பாதியில் நின்ற அங்கன்வாடி மையம்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா கெட்டுஅள்ளி கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்ட தொடங்கப்பட்டது. ஆனால் இன்று வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படவில்லை. பாதியில் விடப்பட்ட இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தில் சமூகவிரோத செயல்கள் நடக்கும் இடமாகவும், மாட்டுக் கொட்டைகையாகவும் செயல்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பாதியில் நின்ற அந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை முழுமையாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நல்லது.
-அன்புராஜ், கெட்டுஅள்ளி, தர்மபுரி.
===
கொசு மருந்து அடிக்க வேண்டும்
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிகளில் கொசு மருந்து, சாக்கடை கழிவுநீர் கால்வாய் தூர் எடுக்காத காரணத்தினால் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அந்த பகுதிகளில் கிருமி நாசினி மருந்து வாரந்தோறும் அடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
===
நோய் பரவும் அபாயம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பகவதி நகர் 4-வது வார்டில் சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஊர்மக்கள், பகவதி நகர், நாமக்கல்.
சேலம் 26-வது வார்டு அரிசி பாளையம், மாதைய்யன் தெருவில் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் கழிவு நீர் வெளியே செல்லாமல் தேங்கி கிடக்கிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் எனவே சுகாதார சீர்கேட்டை தடுக்க அந்த பகுதியில் சாக்கடை கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அரிசிப்பாளையம், சேலம்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேதாஜி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் அந்த பகுதியிலே குளம்போல் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைத்து கழிவு நீர் வெளியேறுவதற்கு வழி செய்து தர வேண்டும்.
ஊர்மக்கள், குமாரபாளையம், நாமக்கல்.
===
சாலையில் வேகத்தடை
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா இருப்பாளி ஊராட்சி ஜலகண்டாபுரம்-எடப்பாடி மாணிக்கம்பட்டி செல்லும் வழியில் காட்டுபாளையம் பஸ் நிறுத்தத்தில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கிறது. எனவே வேகத்தடை மற்றும் ரெட் அலர்ட் லைட் அமைத்து தர வேண்டும்.
-எஸ்.இளங்கோ, இருப்பாளி, சேலம்.
===
தண்ணீர் பிரச்சினை தீருமா?
தர்மபுரி மாவட்டம் தடங்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட நேரு நகர், ராஜராஜன் தெரு மற்றும் பல தெருக்களில் தண்ணீர் பிரச்சினை உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 6 மாதமாக தண்ணீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தண்ணீரை தேடி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பார்களா?
-பிரவீன்குமார், தடங்கம், தர்மபுரி.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் அம்மாபேட்டை காலனி எஸ்.கே. டவுன்ஷிப் 36-வது வார்டில் சாலையில் 2 குப்பைத்தொட்டிகள் இருந்தும், அந்த தொட்டிகள் அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலேயே நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனிப்பார்களா?
-சேகர், அம்மாபேட்டை, சேலம்.
====
Related Tags :
Next Story