அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்ததால் வீட்டை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நோட்டீஸ்


அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்ததால் வீட்டை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நோட்டீஸ்
x
தினத்தந்தி 2 Oct 2021 12:27 AM IST (Updated: 2 Oct 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அடுக்குமாடி குடியிருப்பு சேதமடைந்ததால் வீட்டை காலி செய்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. மாற்று இடத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்
எச்சரிக்கை நோட்டீஸ்
கரூர் அருகே உள்ள கொளந்தாக் கவுண்டனூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 112 வீடுகள் உள்ளன. இந்நிலையில் திட்டப்பகுதியில் உள்ள பிளாக்-டி குடியிருப்பு எண்.81 முதல் 112 வரை (32 வீடுகள்) கொண்ட கட்டிடம் பழுதடைந்து உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் குடியிருப்புகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை நேற்று ஒட்டியுள்ளனர்.    அதில் பருவமழை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் வரையில் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்து வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், தவறும் பட்சத்தில் தங்களுக்கோ, தங்களது உடைமைகளுக்கோ பாதிப்புகளோ, சேதமோ ஏற்பட்டால் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வி்ட மேம்பாட்டு வாரியம் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், 25 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வருகிறோம். குடியிருப்புகள் அதிகளவில் சேதமடைந்துள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்திருந்தோம். முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தற்போது திடீரென எங்களை மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டுமெனவும், மொத்தமாக காலி செய்ய வேண்டுமெனவும் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். 
நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். திடீரென்று மாற்று இடத்தை எங்களால் தேர்வு செய்ய முடியாது. எனவே அரசு பொறுப்பேற்று எங்களுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Next Story