தனியார் ஆஸ்பத்திரியில் பெண் திடீர் சாவு: தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் சாலை மறியல்


தனியார் ஆஸ்பத்திரியில் பெண் திடீர் சாவு: தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:53 AM IST (Updated: 2 Oct 2021 5:53 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் அருகே தனியார் ஆஸ்பத்திரியில் வயிற்று வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் திடீரென உயிரிழந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை கொளத்தூரை அடுத்த லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி சசிகலா என்ற பொன்னி (வயது 35). இவர்களுக்கு 17 வயதில் மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பொன்னிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்ததால், கொளத்தூர் எஸ்.ஆர்.பி. கோவில் தெருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு கடந்த 28-ந் தேதி பொன்னிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சகஜமாக பேசி வந்த பொன்னி, நேற்று காலை 11 மணி அளவில் திடீரென உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரான முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தவறான சிகிச்சை அளித்ததால் பொன்னி உயிரிழந்ததாக அவர்கள் குற்றம் சாட்டினர். அதன்பிறகு திடீரென ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, செம்பியம் உதவி கமிஷனர் செம்பேடு பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு பொன்னியின் சாவுக்கு காரணம் தெரிய வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story