கிருஷ்ணகிரியில் காந்தி ஜெயந்தி விழா உருவச்சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


கிருஷ்ணகிரியில் காந்தி ஜெயந்தி விழா உருவச்சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Oct 2021 10:54 PM IST (Updated: 2 Oct 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் காந்தி ஜெயந்தி விழாவையொட்டி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காந்தி ஜெயந்தி விழா 
கிருஷ்ணகிரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவருடைய உருவப்படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கதர் முதல் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தீபாவளி சிறப்பு கதர் முதல் விற்பனையை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கதர் விற்பனை ஊக்குவிக்கும் பொருட்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலிஸ்டர் ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கிருஷ்ணகிரி மாவட்ட தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு கதர் விற்பனை குறியீடாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இலக்கு எட்டப்பட்டது.
விற்பனை நிலையங்கள்
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர்பட்டு மற்றும் வண்ண பாலிஸ்டர் போன்ற உற்பத்தி பொருட்களுடன், சகோதர நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், அரசு நிதியுதவி பெற்றோரின் உற்பத்தி பொருட்களையும் விற்பனை செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் வாடிக்கையாளர்களின் தேவையை முழு அளவில் பூர்த்தி செய்யும் நோக்குடன் கதர் உற்பத்தி பொருட்களும் தருவிக்கப்பட்டு கிருஷ்ணகிரி கதர் அங்காடியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் வசதிக்கென கதர் அங்காடிகளுடன் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒளி ஏற்ற வேண்டும்
தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில் மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள தள்ளுபடியை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்களை கொள்முதல் செய்து பயனடையவும், ஒவ்வொருவரும் கதர் ஆடையை வாங்கி ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேசன், கதர் விற்பனை அங்காடி மேலாளர் ஜானகிராமன், தனி தாசில்தார் அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story