விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி


விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 3 Oct 2021 1:14 AM IST (Updated: 3 Oct 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தேர்தல் அதிகாரி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம்
உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 18 கார்களை தேர்தல் அதிகாரி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

உள்ளாட்சி தேர்தல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களுக்கு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தாட்டிமானபல்லி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஏழுமலை என்பவரும், வீரிசெட்டிபல்லி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ராஜ்குமார் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

பிரசாரம்

ஏழுமலை மற்றும் ராஜ்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று காலை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், வேலூர் மாவட்ட தலைவர் ஆர்.வேல்முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.நவீன், மாவட்ட தொண்டரணி தலைவர் எம்.சீனிவாசன், மாவட்ட தொண்டரணி இணைச்செயலாளர் வீனஸ்மோகன் உள்பட ஏராளமானோர் குடியாத்தம் சித்தூர்-சாலையில் நேற்று ஒரே நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட கார்களில் வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்தனர். 

ஏராளமான கார்களில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று கொண்டிருப்பதாக  உயர் அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
கார்களை தடுத்து நிறுத்தினார்

இதனையடுத்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அதிகாரியும், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அதிகாரியுமான கே.எஸ்.யுவராஜ், குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று குடியாத்தம்- சித்தூர் சாலையில் தாட்டிமானபல்லி கிராமம் அருகே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்ற கார்களை தடுத்து விசாரித்தனர். 

அப்போது அவர்களிடம் தேர்தல் பிரசாரத்திற்கு உரிய அனுமதி  பெற வேண்டும் என்றும், பிரசாரத்திற்கு குறிப்பிட்ட அளவு கார்களே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் உரிய அனுமதி இல்லாமல்  செல்வதாகக் கூறி 18 கார்களை தேர்தல் அதிகாரி மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். 

போலீசில் புகார்

சுமார் 2 மணி நேரத்திற்கு பின் பிரசாரத்துக்கு வந்த கார்களின் விவரங்களை சேகரித்துக் கொண்டு அனுப்பினர். மேலும் கார்களில் உரிய அனுமதியின்றி பிரசாரத்திற்கு வந்தது குறித்து பரதராமி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 18 கார்களில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story