திருத்தணியில் கடையில் ரூ.5 லட்சம் தங்க நகை அபேஸ்; 2 பேர் கைது
திருத்தணியில் தங்க நகைகள் விற்கும் கடையில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தங்க நகை அபேஸ்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மா.பொ.சிவஞானம் சாலையில் சிண்டிகேட் வங்கி எதிரில் நகை கடை நடத்தி வருபவர் அசோக் குமார் ஜெயின். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் நகை வாங்க வந்தார். அவருக்கு அசோக்குமார் தனது கடையில் உள்ள தங்க நகைகளை எடுத்து காண்பித்தார். இது வேண்டாம் எனக்கு வேறு மாடல் வேண்டும் என்று அந்த மர்ம நபர் கூறியதால் அசோக் குமார் ஜெயின் தனது கடைக்கு எதிரில் இருந்த தனது உறவினர் பிரகாஷ் என்பவருடைய நகை கடையில் இருந்து 100 கிராம் எடை கொண்ட 4 தங்கச் சங்கிலியை எடுத்து வந்து அவருக்கு காட்டினார்.
அப்போது அந்த நபர் நகை வாங்குவது போல் பாசாங்கு செய்து திடீரென்று ரூ5 லட்சம் மதிப்புள்ள 4 தங்கச்சங்கிலிகளை எடுத்துக்கொண்டு மின்னல்வேகத்தில் எதிர்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.
இது குறித்து திருத்தணி போலீசாருக்கு அசோக்குமார் உடனே புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.
கைது
அதில் நகைக்கடையில் நகை கொள்ளை அடித்து சென்ற நபரும், காத்திருந்த நபரும் பதிவாகியிருந்தன. இதனால் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி 2 மணி நேரத்தில் அந்த மர்ம நபர்களை கைது செய்தனர். அவர்களை திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் பிடிபட்ட நபர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள சத்திரவாடா கிராமத்தை சேர்ந்த சிக்கந்தர் (வயது 30). மற்றொருவர் நகரி தொகுதியை சேர்ந்த கரகண்டாபுரம் பகுதியை சேர்ந்த கங்காதரன் (32) என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 12.5 பவுன் தங்கச்சங்கிலிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story