அடுத்த தேர்தலில் காட்பாடி தொகுதி பெண்களுக்கு ஒதுக்க படலாம். அமைச்சர் துரைமுருகன் பேச்சு


அடுத்த தேர்தலில்  காட்பாடி தொகுதி பெண்களுக்கு ஒதுக்க படலாம். அமைச்சர் துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 3 Oct 2021 11:25 PM IST (Updated: 3 Oct 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

அடுத்த தேர்தலில் காட்பாடி தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்படலாம் என்று அக்ராவரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

ராணிப்பேட்டை

அடுத்த தேர்தலில் காட்பாடி தொகுதி பெண்களுக்கு  ஒதுக்கப்படலாம் என்று அக்ராவரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தேர்தல் பிரசாரம்

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டை, கிருஷ்ணாவரம் கூட்ரோடு, கத்தாரிகுப்பம், ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு, அக்ராவரம் ஆகிய இடங்களில் நேற்று இரவு பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாலாஜா ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் அக்ராவரம் ஏ.கே.முருகன் தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் தமிழக நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

கொடுக்கும் இடத்தில்

தமிழ் நாடு சட்டமன்றம் உருவாகி 100 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இதில் 50 ஆண்டு காலம் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே சட்ட மன்ற உறுப்பினராக அதிககாலம் இருந்தவன் நான் மட்டுமே. இன்றைக்கு தி.மு.க. தலைவருக்கு அடுத்த படியாக ஆட்சியிலும், கட்சியிலும் பதவி வகித்து வருகிறேன்.

முன்பு கேட்கும் இடத்தில் இருந்தேன். இன்றைக்கு கொடுக்கும் இடத்தில் இருக்கிறேன். இந்த தொகுதிக்கு தேவையான அனைத்தையும் நிறைவேற்றி தரும் அதிகாரத்தில் நான் இருக்கிறேன். அதை செயல்படுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் வேண்டும். சட்டி நிறைய குழம்பு இருந்தாலும் இதை அள்ளும் அகப்பை சரியாக இல்லாவிட்டால், குழம்பை சரியாக அள்ளி ஊற்றமுடியாது. நல்ல அகப்பை போல் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் திட்டங்கள் மக்களை சென்றடையும். இல்லாவிட்டால் அது உள்ளாட்சி தலைவர்களின் மனைவியருக்கு நகையாக சென்றுவிடும்.

பெண்களுக்கு ஒதுக்கப்படலாம்

 எனவே இத்தேர்தலில் மக்களுக்காக உழைக்க தி.மு.க. சார்பில் போட்டியிடும், வேட்பாளர்களை ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளது. 20ஆண்டு காலம் காத்திருந்த விவசாயிகளுக்கு, ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களிலேயே 1 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியின்போது நானே ரூ.15 லட்சம் கட்டி மின் இணைப்பு வாங்கினேன். ஆனால் இப்போது அப்படி இல்லாமல், இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதிக்கீடு வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். இதே போல் தமிழகத்திலும் சட்ட மன்றத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால் 117 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக  தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அடுத்த தேர்தலில் காட்பாடி தொகுதி பெண்களுக்கு ஒதுக்க படலாம். வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோரும் பேசினர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story