மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தீக்குளிக்க முயற்சி
நிலுவையில் உள்ள 22 மாத சம்பளத்தை வழங்கக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
நிலுவையில் உள்ள 22 மாத சம்பளத்தை வழங்கக்கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.
கூட்டரங்கு முன்பு காத்திருந்த பொதுமக்களில் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திருவண்ணாமலை ஒன்றியம் அரடாபட்டு பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது.
சம்பளம் வழங்க வேண்டும்
தொடர்ந்து அவர் கூறுகையில், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படவில்லை. எனக்கு ஓய்வூதிய பண பயன்களும், ஊதியக்குழு நிலுவை தொகை பண பயன்களும் இதுவரை வழங்கப்படவில்லை.
எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. தயவு கூர்ந்து எனக்கு வழங்கப்பட வேண்டிய 22 மாத சம்பளம், எனது ஓய்வூதிய பண பயன்கள் மற்றும் ஊதியக்குழு நிலுவை தொகை பண பயனையும் வழங்க வேண்டும். மேலும் எனது மகனுக்கு எனது வேலையை வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் அவரை போலீசார் கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரையும், அவருடன் வந்த நபர்களையும் போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story