தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்தக்கோரி வழக்கு


தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்தக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 5 Oct 2021 7:19 AM IST (Updated: 5 Oct 2021 7:19 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்தக்கோரி வழக்கில் தூத்துக்குடி கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மதுரை,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்தக்கோரி வழக்கில் தூத்துக்குடி கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

சூரசம்ஹார நிகழ்ச்சி

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் தசரா திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் போது பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதற்காக பல நாட்கள் விரதம் இருப்பார்கள். இந்த திருவிழாவையொட்டி, கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த வருடம் சூரசம்ஹார நிகழ்ச்சியானது முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடக்கும் என்றும், இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார். பாரம்பரியமாக நடப்பது போல கடற்கரையிலேயே சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

கடற்கரையில்....

பக்தர்களை அனுமதிக்காமல் கடற்கரையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை. இதுசம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அனுப்பியும் பலன் இல்லை. எனவே தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை கடற்கரையில் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நோட்டீஸ்
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், முத்தாரம்மன் கோவில் தசரா விழாக்கள் அனைத்தும் சமூக வலைதளம், உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்த அனுமதித்தால், அருகில் உள்ள கிராம மக்கள் அதிக அளவில் குவிந்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவலாம் என்றார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் மாதம் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story