தென்மேற்கு பருவமழை பொழிவு சராசரியை விட அதிகம்


தென்மேற்கு பருவமழை பொழிவு சராசரியை விட அதிகம்
x
தினத்தந்தி 5 Oct 2021 7:18 PM IST (Updated: 5 Oct 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை பொழிவு சராசரியை விட அதிகம்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகமாக பதிவாகி உள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வந்தது. ஜூலை மாதம் மழை அதிகமாக பதிவானது. குறிப்பாக கூடலூர், பந்தலூர், அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் அதிக மழைப்பொழிவு காணப்பட்டது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்தது. 


நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட அதிகமாக பெய்தது. இதனால் போத்திமந்து அணை உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின.


இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நீலகிரியில் தென்மேற்கு பருவமழை சராசரியாக 938.40 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 206.53 மில்லி மீட்டர், ஜூலை மாதம் 376.15 மில்லி மீட்டர், ஆகஸ்டு மாதம் 202.67 மில்லி மீட்டர், செப்டம்பர் மாதம் 160.54 மில்லி மீட்டர் என மொத்தம் 945.9 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. இது சராசரியை விட 7 மில்லி மீட்டர் அதிகமாகும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 1296.81 மில்லி மீட்டர் பதிவானது.


சராசரியை விட அதிகம்
இது சராசரியை விட 38 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் மழை குறைவாக பெய்து உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் மழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால், அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 


நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-5.8, நடுவட்டம்-13, குந்தா-15, அவலாஞ்சி-37, எமரால்டு-45, கெத்தை-34,
பர்லியார்-43, கேத்தி-35, எடப்பள்ளி-46, கோத்தகிரி-38, கூடலூர்-16, தேவாலா-21 உள்பட மொத்தம் 476.3 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 16.42 ஆகும்.


Next Story