உப்பாறு ஓடையில் கட்டிட கழிவுகள்


உப்பாறு ஓடையில் கட்டிட கழிவுகள்
x
தினத்தந்தி 5 Oct 2021 9:44 PM IST (Updated: 5 Oct 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

உப்பாறு ஓடையில் கட்டிட கழிவுகள்

குடிமங்கலம், 
பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடையில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலை மாசடைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பாறு ஓடை
குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாக உப்பாறு செல்கிறது. உப்பாறு ஓடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். 
உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை தூர்வாரப்படாததால் பல இடங்களில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதன் காரணமாக உப்பாறு ஓடை புதர்மண்டி கிடக்கிறது. மேலும் பல இடங்களில் அந்தந்த பகுதியில் உள்ள கட்டிடக்கழிவுகள், குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் உப்பாறு ஓடை மாசடைந்து வருகிறது.
நடவடிக்கை
உப்பாறு ஓடையில் நீர் செல்லும் இடங்களில் உப்பாறு ஓடையின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. பாலங்கள் கட்டப்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் பாலத்தின் அடிப்பகுதியில், தண்ணீர் செல்லும் நீர் வழித்தடங்களில் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. மழைக்காலங்களில் ஓடைகளில் அதிகளவு தண்ணீர் செல்லும் போது கழிவுகள் நீர்வழித் தடங்களை அடைத்துக்கொள்கிறது. 
இதனால் தண்ணீர் பல இடங்களில் வீணாகி வருகிறது. குடிமங்கலம் பகுதியில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்று வருகிறது. கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கு உப்பாறு ஓடை பயன்படுகிறது. உப்பாறு ஓடையில் கழிவுகள் கொட்டப்படுவதால் நீர் மாசடைந்து வருகிறது. ஓடையில் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story