வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபர் கைது
வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபர் கைது
அனுப்பர்பாளையம்,
அங்கேரிபாளையம் அருகே வீடு புகுந்து செல்போன்களை திருடிய வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் திருட்டு
திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 37). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை திறந்த வைத்து விட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த செல்போனை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது மறுமுனையில் வாலிபர் ஒருவர் பேசி உள்ளார்.
அவரிடம் என்னுடைய செல்போன் காணாமல் போய் விட்டது. அது உங்களிடம் இருப்பதால் எனக்கு கொடுத்து விடுங்கள் என்று ராஜேஷ்கண்ணன் அந்த வாலிபரிடம் கெஞ்சி உள்ளார். ஆனால் அந்த வாலிபர் நான் செல்போனை பணம் கொடுத்து வாங்கி இருப்பதால், அதே தொகையை நீங்கள் எனக்கு கொடுத்தால் செல்போனை தருவதாக வாலிபர் கூறி உள்ளார்.
போலீசுக்கு தகவல்
அதற்கு சம்மதம் தெரிவித்த ராஜேஷ்கண்ணன், வந்து செல்போனை கொடுத்து விட்டு, பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று அந்த வாலிபரிடம் கூறி உள்ளார். மேலும் ராஜேஷ்கண்ணன் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ராஜேஷ்கண்ணனிடம் செல்போனை கொடுத்து விட்டு பணம் வாங்க வந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பெருமாநல்லூரை அடுத்த பொங்குபாளையத்தை சேர்ந்த தையல் தொழிலாளியான கார்த்திக் (32) என்பது தெரிய வந்தது.
கைது
மேலும் அவர் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ்கண்ணன் வீட்டிற்குள் புகுந்து செல்போனை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருடைய செல்போனையும் கார்த்திக் வீடு புகுந்து திருடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story