மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பொதுமக்கள் அவதி
மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
கடலூர்,
வளிமண்டல சுழற்சி
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு இடைவிடாது மழை தூறிக் கொண்டே இருந்தது. இந்த மழை மாலை வரை பெய்து கொண்டே இருந்தது.
இடைவிடாது பெய்த மழை
இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் இடைவிடாது பெய்த மழையால் நேற்று காலையில் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி வேலைக்கு சென்றதை காண முடிந்தது.
இதுதவிர நடைபாதை வியாபாரிகள் நேற்று வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் அதிகாலை முதல் மாலை வரை இடைவிடாது பெய்த இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கினர்.
மக்கள் அவதி
இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, வேப்பூர், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 38.6 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக கீழ்செருவாயில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Related Tags :
Next Story