சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி மீனவர் பலி அதிர்ச்சியில் 15 பேருக்கு வாந்தி-மயக்கம்


சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி மீனவர் பலி அதிர்ச்சியில் 15 பேருக்கு வாந்தி-மயக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2021 10:27 PM IST (Updated: 5 Oct 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர் மின்னல் தாக்கி பலியானார். மேலும் அதிர்ச்சியில் 15 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

சிதம்பரம், 

இடி -மின்னலுடன் மழை

சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55), மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தார். பின்னர் அவர் மீன்பிடித்து விட்டு நேற்று காலை சாமியார்பேட்டை கடற்கரைக்கு திரும்பினார்.
அப்போது அந்த பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பாலகிருஷ்ணன் மற்றும் சக மீனவர்கள், வலையில் சிக்கியிருந்த மீன்களை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டிருந்தனர்.

மீனவர் பலி

அந்த சமயத்தில் பாலகிருஷ்ணன் மற்றும் அவருடன் இருந்த ராமலிங்கம்(45), காளியப்பன் (60), வடிவேல் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 4 பேரும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மீனவர்கள், உடனே அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ராமலிங்கம் உள்ளிட்ட 3 பேருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதற்கிடையே மின்னல் தாக்கிய போது சாமியார்பேட்டை கடற்கரையில் இருந்த 12 பேருக்கு அதிர்ச்சியில் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்களும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி மீனவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story