தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான தெருக்கள்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் எக்ஸ்போசிட்டி, ஸ்ரீவெங்கடேஸ்வராநகர் பகுதிகளில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருக்களுக்கான சாலை, மண் பாதையாக உள்ளது. சாரல் மழை பெய்தால் கூட தெருக்கள் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் திறந்தவெளியில் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து தரவேண்டும்.
-மாரியம்மாள், பாலகிருஷ்ணாபுரம்.
பள்ளத்தால் விபத்து அபாயம்
தேனி அரண்மனைபுதூரில் வீரலட்சுமிகோவில் தெருவில் கடந்த மாதம் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. ஆனால் குழாயை பதித்த பின்னர் சில இடங்களில் பள்ளத்தை சரியாக மூடாமல் அப்படியே விட்டுவிட்டனர். இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். இந்த பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், அரண்மனைபுதூர்.
பஸ் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு
செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டை, சேடப்பட்டி பகுதிகளில் பள்ளி மாணவர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகள் வழியாக காலை நேரத்தில் பஸ் வசதி இல்லாததால், மாணவ-மாணவிகள் தவித்து வருகின்றனர். எனவே செம்பட்டியில் இருந்து சேடப்பட்டி வழியாக பட்டிவீரன்பட்டிக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்க வேண்டும்.
-குமார், செம்பட்டி.
ஆபத்தான மின்கம்பங்கள்
வேடசந்தூர் ஒன்றியம் விருதலைபட்டி ஊராட்சி தெற்கு கோவில்பட்டியில் அழகாபுரி செல்லும் வழியில் பெருமாள் கோவில் அருகே 3 மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலு அவற்றின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. பலத்த காற்று, மழைக்கு அவை விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
-தங்கபாண்டி, எத்திலாம்பட்டி.
அடிப்படை வசதிகள் வேண்டும்
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் எதிரே உள்ள ஆற்றுப்பாதை தெருவில் சாலை, சாக்கடை கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நாகராஜ், அய்யம்பாளையம்.
சேதமடைந்த நூலக கட்டிடம் (படம்)
தேனி ஊஞ்சாம்பட்டியில் உள்ள நூலக கட்டிடம் சேதம் அடைந்து விட்டது. இதனால் மக்கள் அச்சத்துடன் நூலகத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நூலக கட்டிடத்தை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையராஜா, ஊஞ்சாம்பட்டி.
சாலையில் சுற்றும் கால்நடைகள்
திண்டுக்கல்லில் நாகல்நகர், ஆர்.எம்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில நேரம் விபத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும் சாலையில் படுத்து கிடக்கும் கால்நடைகள் வாகனங்களில் சிக்கி காயமடைகின்றன. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், திண்டுக்கல்.
Related Tags :
Next Story