பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் வரத்து குறைந்ததால் ரூ 2 கோடி வர்த்தகம் பாதிப்பு
பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் வரத்து குறைந்ததால் ரூ 2 கோடி வர்த்தகம் பாதிப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி சந்தையில் மாடுகள் விற்பனை குறைந்ததால் ரூ.2 கோடி வர்த்தகம் இழப்பு ஏற்பட்டது. எனவே கேரள வியாபாரி களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
மாட்டு சந்தை
பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் வியாபாரி களை கொண்டு மட்டும் சந்தையை நடத்தி கொள்ள அனுமதி அளித்து உள்ளது.
இதன் காரணமாக கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரி களுக்கு அனுமதி இல்லை. இந்த நிலையில் பொள்ளாச்சியில் நேற்று மாட்டு சந்தை நடைபெற்றது. சந்தைக்கு கோவை உள்பட வெளிமாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
வரத்து குறைந்தது
கேரள வியாபாரிகள் வராததால் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது. மேலும் விற்பனை இல்லாததால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வியாபாரிகள், மாடுகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும் சந்தை களை இழந்து இருந்தது.
இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி சந்தைக்கு வழக்கமாக 2500 முதல் 3 ஆயிரம் மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும். மேலும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் உள்ளூர் வியாபாரிகளுடன் சந்தையை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு
சந்தைக்கு பெரும்பாலும் கேரளாவில் இருந்து தான் அதிகளவு வியாபாரிகள் வருவார்கள். ஆனால் தடை உத்தரவு காரணமாக அங்கிருந்து வியாபாரிகள் யாரும் வருவதில்லை. 1500 மாடுகள் தான் கொண்டு வரப்பட்டன.
இதனால் மாடுகள் வரத்து மற்றும் விற்பனை குறைந்தது. ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து சந்தைக்கு கேரள வியாபாரிகளையும் அனுமதிக்க வேண்டும்.
சந்தையில் நாட்டு காளை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு எருமை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும், மொரா ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், செர்சி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story