புகளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியல்
அடிப்படை வசதி செய்து தரக்கோரி புகளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நொய்யல்,
சேறும், சகதியுமான சாலை
புன்செய் புகளூர் பேரூராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி மற்றும் தார்சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
மிக தாழ்வாக உள்ள சுந்தரம்பாள் நகரில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் அதிகளவு தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் இந்த தெருவை சேர்ந்த பொதுமக்கள் நடந்தும், வாகனத்திலும் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
சாலை மறியல்
இதில் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி புகளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும், கரூர்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சில பெண்கள் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர் மெயின் ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த புஞ்சைபுகளூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, புகளூர் தாசில்தார் மதிவாணன், இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி கூறுகையில் சுந்தரம்பாள் நகரில் சிமெண்டு சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணி மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story