பூக்களின் விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்காமல் விடப்பட்ட சென்டிப்பூக்கள் தொடர் மழையால் அழுகும் அபாயம்


பூக்களின் விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்காமல் விடப்பட்ட சென்டிப்பூக்கள் தொடர் மழையால் அழுகும் அபாயம்
x
தினத்தந்தி 6 Oct 2021 12:20 AM IST (Updated: 6 Oct 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

பூக்களின் விலை வீழ்ச்சியால் செடிகளில் பறிக்காமல் விடப்பட்ட சென்டிப்பூக்கள் தொடர் மழையால் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆதனக்கோட்டை:
பூக்கள் சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, வளவம்பட்டி, தொண்டைமான்ஊரணி, கொழுந்துவாரிப்பட்டி, மோளுடையான்பட்டி, குப்பையன்பட்டி, மட்டையன்பட்டி, வாராப்பூர், பண்ணிரண்டாம்பட்டி, மனவாத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சென்டிப்பூ, சம்பங்கி, காக்கரட்டான், மல்லிகை, செவ்வந்தி, கோழிகொண்டை உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
விலை வீழ்ச்சி
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த தினங்களில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட விசேஷங்கள் நடைபெற்றதால் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்தது. புரட்டாசி மாதம் பிறந்த பிறகு சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்களின் தேவை குறைந்ததால் விலையும் குறைந்து. 
சென்டிப்பூக்கள் கிலோ ரூ.5-க்கு குறைவாகவே விற்பனையானது. புதுக்கோட்டை- தஞ்சாவூர் போன்ற பூ சந்தைகளுக்கு பூக்களை கொண்டு சென்ற விவசாயிகள் சென்டிப்பூக்கள் விலை போகாததால் சென்டிப்பூக்களை குப்பையிலே கொட்டிவிட்டு கொண்டு சென்ற போக்குவரத்து செலவுக்கு கூட போகவில்லையே என்று கவலையில் விவசாயிகள் வீடு திரும்புகின்றனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதுகுறித்து பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:- அரை ஏக்கரில் பூக்கள் சாகுபடி செய்ய ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 வரை செலவாகிறது. கொரோனா ஊரடங்கால் சென்ற ஆண்டு பூக்கள் சாகுபடியில் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்தோம். 
இந்த ஆண்டு பூக்களால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த எங்களுக்கு இந்த மாதம் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. விலை வீழ்ச்சியால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ள எங்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் பூச்செடிகள் வயலிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பூ சாகுபடி செய்த விவசாயிகள் முற்றிலுமாக நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story