கரூரில் ஜவுளி ஏற்றுமதி கடும் பாதிப்பு


கரூரில் ஜவுளி ஏற்றுமதி கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 12:30 AM IST (Updated: 6 Oct 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

கப்பலில் சரக்கு கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளதால் கரூரில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

கரூர், 
ஜவுளி ஏற்றுமதி தொழில்
கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்பு, பஸ் பாடி கூண்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சிறப்பாக நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு அன்னிய செலவாணியை அதிகளவில் ஈட்டி தரும் நகரமாகவும் கரூர் உள்ளது.
இதன் மூலமாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று பயன் பெற்று வருகின்றனர். இதில் முக்கிய பங்கு வகிப்பது ஜவுளி ஏற்றுமதி தொழில் ஆகும். ஜவுளித்தொழிலை பொறுத்தவரை கரூரில் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
கரூரில் உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 
இங்கிருந்து வீட்டு உபயோக ஜவுளிகளான ஸ்கிரீன்கள், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், சோபா விரிப்புகள், துண்டு உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சரக்கு கப்பல் போக்குவரத்து
உள்நாட்டு வர்த்தகத்தை விட கரூரில் வெளிநாட்டு வர்த்தகம் தான் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதில், உற்பத்தி பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கப்பல் போக்குவரத்தும் ஒன்றாக உள்ளது.
இந்தநிலையில் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சமீபகாலமாக 400 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இதனால் கரூரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.
கட்டுப்பாடுகள்
இதுகுறித்து கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:- சரக்குகளை கையாள்வதில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் சரக்கு கப்பல் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி உள்ளன.
கரூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களை சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது. 
செலவை ஏற்க மறுப்பு
இதில் 40 அடி நீளம் உள்ள ஒரு கன்டெய்னரில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பொருட்களை அனுப்பி வைக்க 3 ஆயிரம் டாலரில் இருந்து 15 ஆயிரம் டாலராகவும், ஐரோப்பிய நாடுகளுக்கு 2 ஆயிரம் டாலரில் இருந்து 8 ஆயிரம் டாலராகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது 4 மடங்கு உயர்வாகும். இதற்கு முன்னர் ஏற்றுமதி ெசலவை வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள கட்டண உயர்வால் ஏற்றுமதி செலவை அவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவு வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடுவதோடு, நாட்டுக்கு வரும் அன்னிய செலவாணியும் இதன் மூலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story