மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை:
குடும்ப தகராறு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 33). இவரது மனைவி சண்முகவள்ளி (29). கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் சொத்து தொடர்பாக மனைவியை அவர் கொடுமை படுத்தியிருக்கிறார். இதையடுத்து சண்முகவள்ளி கணவரை பிரிந்து தனது தாய் வளர்மதியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந் தேதி திருக்கோகர்ணம் அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள வளர்மதியின் கடை முன்பு அவரை கொலை செய்யும் நோக்கில் அரிவாளால் கணேசன் வெட்டினார். இதனை தடுக்க முயன்ற மனைவி சண்முகவள்ளியையும் அவர் வெட்டினார். இதில் வளர்மதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சண்முகவள்ளியும் காயமடைந்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி, மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் கணேசனுக்கு கொலை முயற்சி பிரிவில் ஆயுள்தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், மனைவியை கொடுமைப்படுத்தியதும் மற்றும் வெட்டியதற்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதையடுத்து கணேசனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
பாராட்டு
இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அங்கவி ஆஜராகி வாதாடினார்.
Related Tags :
Next Story