புதுக்கோட்டையில் மீண்டும் போதை ஊசி விற்பனை 3 வாலிபர்கள் கைது; மாத்திரைகள் பறிமுதல்
புதுக்கோட்டையில் மீண்டும் போதை ஊசி விற்பனை தொடங்கி உள்ளது. 3 வாலிபர்களை கைது செய்து மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
போதை ஊசி
புதுக்கோட்டையில் போதை ஊசி விற்பனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக காணப்பட்டது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து போதை ஊசி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனால் போதை ஊசி விற்பனை குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் போதை ஊசி விற்பனை தொடங்கியிருக்கிறது.
திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடப்பன்வயல் பகுதியில் போதை ஊசி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 24), சக்திவேல் (24), ஹக்கிம் (25) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் போதை ஊசிக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை விற்பதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. போதை மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அதனை ஊசியில் ஏற்றி உடலில் செலுத்துகின்றனர்.
மாத்திரைகள் பறிமுதல்
இதைத்தொடா்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை ஊசிக்கு பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைதானவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story