திண்டுக்கல்லில் மதுக்கடைகளை அடைத்து போராட்டம்


திண்டுக்கல்லில் மதுக்கடைகளை அடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 1:30 AM IST (Updated: 6 Oct 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் மதுக்கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்:
காஞ்சீபுரம் அருகே டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் மதுக்கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
டாஸ்மாக் ஊழியர் படுகொலை 
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டது. இதில் டாஸ்மாக் விற்பனையாளர் துளசிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்றொரு ஊழியருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் படுகொலை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை டாஸ்மாக் மதுக்கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 150 மதுக்கடைகளும் மூடப்பட்டன. 
ஆர்ப்பாட்டம் 
திண்டுக்கல் அருகே உள்ள முள்ளிப்பாடியில் டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் ஊழியரை படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலையான ஊழியரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதற்கிடையே டாஸ்மாக் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தனர். இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால் மாலை 3 மணிக்கு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் 5 மணி நேரம் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், மதுவாங்க முடியாமல் மதுப்பிரியர்கள் தவித்தனர். மேலும் மதுபான விற்பனையும் பாதித்தது.
பழனி
பழனியில், திண்டுக்கல் மாவட்ட அனைத்து டாஸ்மாக் கூட்டுக்குழு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எப்.ரோட்டில் உள்ள மதுக்கடை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பழனி பகுதி நிர்வாகி செந்தில் தலைமை தாங்கினார். இதில், பழனி பகுதியை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள், ஊழியர்கள் என ஏராளமானோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்துகொண்டனர். முன்னதாக 2 மணி நேரம் டாஸ்மாக் கடையை அடைத்து போராட்டம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story