அரசு பள்ளி வகுப்பறைக்குள் கழிவுநீர் புகுந்ததால் மாணவிகள் அவதி
அரசு பள்ளி வகுப்பறைக்குள் கழிவுநீர் புகுந்ததால் மாணவிகள் அவதியடைந்தனர்.
தாமரைக்குளம்:
கழிவுநீர் புகுந்தது
அரியலூர் நகரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழை பெய்வதால் சாலைகள் மற்றும் கழிவுநீர் வாய்க்காலில் அதிகளவு மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்கிறது.
இந்நிலையில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து கழிவுநீரானது பள்ளிக்குள் புகுந்தது. வகுப்பறைக்குள் கழிவுநீர் வந்ததால் மாணவிகள் மிகவும் அவதியடைந்தனர். கழிவுநீரை வெளியே அகற்றியபோதும் வகுப்பறை ஈரமாக உள்ளதால் மாணவிகள் அங்கு அமர்ந்து படிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவிகள் வெளியே அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோரிக்கை
வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து படிப்பதால், படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்று மாணவிகள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் வகுப்பறைக்குள் கழிவுநீர் வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலில் இருந்து பள்ளிக்குள் கழிவுநீர் புகுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story