ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை செய்தோம்
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் கொலை செய்தோம்
அயோத்தியாப்பட்டணம், அக்.6-
மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் அவரை கொலை செய்தோம் என்று கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாற்றுத்திறனாளி
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள அக்ரஹார நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பிறவியிலேயே பேச முடியாத, கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
கடந்த 3-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மணிகண்டன், குள்ளம்பட்டி பிரிவு சாலை அருகே கரடு பகுதியில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் காரிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மணிகண்டன் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்டதும், அவரது வயிறு, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பாட்டிலால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையாளிகளை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். இதனிடையே தனிப்படை போலீசார் குள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருணாச்சலம் (22) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மணிகண்டனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
அவர் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு
கடந்த 3-ந் தேதி இரவு நானும், எனது நண்பனான திருமலையும் (22) குள்ளம்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு, மது குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம். வழியில் மணிகண்டன் எங்களிடம் லிப்ட் கேட்டார்.
இதையடுத்து அவரை ஏற்றி கொண்டு குள்ளம்பட்டி கரடு பகுதியில் மது அருந்த சென்றோம். அங்கு மணிகண்டனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தாக்கி, அங்கிருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டோம். மேலும் மதுபாட்டிலை உடைத்து அவரை குத்திக்கொலை செய்தோம். பின்னர் அங்கிருந்து நாங்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
பின்னர் போலீசார் அருணாசலத்தை கைது செய்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக திருமலையை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த மாற்றுத்திறனாளியை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story