தந்தை உள்பட 3 பேர் கைது


தந்தை உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2021 1:58 AM IST (Updated: 6 Oct 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

தந்தை உள்பட 3 பேர் கைது

எடப்பாடி, அக்.6-
எடப்பாடி அருகே விஷ ஊசி போட்டு மகனை கொலை செய்த தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புற்றுநோய்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கச்சுப்பள்ளி கிராமம் குடைக்காரன் வளவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 44). லாரி டிரைவர். இவருடைய மனைவி இலக்கியா (36). இந்த தம்பதிக்கு 2 மகன்கள். இதில் கடைசி மகன் வண்ணத்தமிழ் (14). இவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தான்.
கடந்த ஆண்டு விளையாடும் போது கீழே விழுந்ததில் வண்ணத்தமிழுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால் புற்றுநோய் காரணமாக காயம் குணமாகவில்லை. இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அவனை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். மேலும் வலியால் துடித்த அவனுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து வந்தனர்.
விபரீத முடிவு
இந்தநிலையில் மகன் புற்று நோய் காரணமாக வலியால் அவதிப்பட்டு வந்ததை பார்த்து பெரியசாமி வேதனை அடைந்தார். மேலும் வண்ணத்தமிழ் உடல் மெலிந்து வந்ததால் அவர் மன வருத்தத்தில் இருந்தார். இதனால் தனது மனதை கல்லாக்கி கொண்டு ஒரு விபரீத முடிவை எடுத்தார். அதன்படி தனது மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்ய முடிவு செய்தார்.
இதற்காக கொங்கணாபுரம் பகுதியில் தனியார் பரிசோதனை ஆய்வகம் நடத்தி வரும் கன்னந்தேரி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (39) என்பவரிடம் தனது மகனை கருணை கொலை செய்ய ஆலோசனை கேட்டார். அவரது அறிவுரைப்படி குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபு என்பவரை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்தார்.
மகன் கொலை
இதையடுத்து பிரபு காய்ச்சல், தோல் வெடிப்பு, தோல் அரிப்பு ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்தை ஊசி மூலம் வண்ணத்தமிழின் கை நரம்பு வழியாக செலுத்தினார். இதனால் சிறிது நேரத்தில் அவன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவனது உடலை அடக்கம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு  நல்லசிவம், இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
தந்தை உள்பட 3 பேர் கைது
இந்தநிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை விஷ ஊசி போட்டு கொலை செய்ததாக கூறி பெரியசாமி மற்றும் பிரபு ஆகியோர் நேற்று கச்சுப்பள்ளி கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் கொங்கணாபுரம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தனியார் பரிசோதனை ஆய்வக உரிமையாளர் வெங்கடேசையும் பிடித்து விசாரித்தனர்.
இதையடுத்து பெரியசாமி, பிரபு, வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story