தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
உணவு சரியில்லாத காரணத்திற்காக ஏற்பட்ட தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தஞ்சாவூர்;
உணவு சரியில்லாத காரணத்திற்காக ஏற்பட்ட தகராறில் தம்பியை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
தகராறு
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே ராஜேந்திரன் ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது57). இவர் கருவேல மரத்தை வெட்டி கரி தயாரித்து ஓட்டல்களுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய சித்தி மகனான நாகத்தி கிராமம் சிவன்கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(32) என்பவரும் இதே தொழிலை செய்து வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி இரவு 11 மணிக்கு ராஜேந்திரன் ஆற்காடு பகுதியில் ஒரு கருவேலங்காட்டில் உள்ள கொட்டகையில் வீராசாமியும், கண்ணனும் சாப்பிட்டனர். அப்போது உணவு சரியில்லை என்ற காரணத்தி்ற்காக இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
இந்த வாக்குவாதம் முற்றி இவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த வீராசாமி அரிவாளை எடுத்து கண்ணனை வெட்டிக் கொன்றார். மேலும் கண்ணனின் அண்ணன் சூரியமூர்த்திக்கும், அவரது மகன் சுதாகருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கொலை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வீராசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரணை செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.
ஆயுள் தண்டனை
அதில் அவர், கண்ணனை கொலை செய்த வீராசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டடைனயும், கொலை மிரட்டல் வழக்கில் 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்தார்.
இந்த தீர்ப்புகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
பரிந்துரை
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வீராசாமி சிறைக்கு செல்வதால் அவருடைய 11 வயது மகள், தாய்-தந்தையின்றி இருந்து வருவதாலும், அவருக்கு ஆதரவாக யாரும் இல்லாத காரணத்தினாலும், வீராசாமியின் மகளின் இருப்பிடம், உணவு, உடை மற்றும் பராமரிப்புக்கு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு நீதிபதி மதுசூதனன் பரிந்துரை செய்தார்.
Related Tags :
Next Story