தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சேலம், அக்.6-
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தொழிலாளி
சேலம் வேம்படிதாளம் அருகே உள்ள நடுவனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் மாரியப்பன் (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (45). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்கள் ஆவர். இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம்.
அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து இருவரும் மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துசாமி அருகில் கிடந்த மரப்பலகையை எடுத்து மாரியப்பனை தாக்கினார்.
ஆயுள் தண்டனை
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துசாமியை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நண்பரை கொன்ற முத்துசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆபிரகாம்லிங்கன் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story