ரெயிலை தவறவிட்ட ரெயில்வே அதிகாரிகள்
குழித்துறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள் ரெயிலை தவறவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த ரெயிலில் அதிகாரிகள் ஏறினர்.
குழித்துறை,
குழித்துறை ரெயில் நிலையத்தில் ரெயில்வே அதிகாரிகள் ரெயிலை தவறவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அந்த ரெயிலில் அதிகாரிகள் ஏறினர்.
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
திருச்சி-திருவனந்தபுரம் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. அது பகலில் குழித்துறை ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போது, அந்த ரெயிலில் வந்த கார்டு மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர் ஆகிய இருவரும் ரெயிலில் இருந்து இறங்கினர்.
பின்னர் அந்த ரெயில் அங்கு சிறிது நேரம் நின்றுவிட்டு மதியம் 12.19 மணிக்கு புறப்பட்டது. அப்போது, ரெயிலில் ஏற வேண்டிய கார்டு மற்றும் பயணச்சீட்டு பரிசோதகர் ஏறவில்லை. அவர்கள் ரெயிலை நிறுத்த முயற்சிப்பதற்குள் அது நிலையத்தை விட்டு வெளியே சென்றுவிட்டது. இதனால் பதற்றமடைந்த அவர்கள் இது குறித்து விரிகோடு ெரயில்வே கேட் கீப்பருக்கு தகவல் தெரிவித்தனர்.
நடந்து வந்து ஏறினர்
இதற்கிடையே அந்த ரெயில், விரிகோடு ரெயில்வே கேட்டுக்கு வந்தது. அப்போது, அங்கு தயாராக நின்ற கேட் கீப்பர் கொடி காட்டி ெரயிலை நிறுத்தினார். அதனால் அந்த ெரயில் திடீரென்று விரிகோட்டில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2 அதிகாரிகளும் ரயில்வே பாதை வழியாக சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து விரிகோட்டில் நின்ற இன்டர்சிட்டி ரெயிலில் ஏறினர்.
அதேநேரம் திடீரென்று ரெயில் நிறுத்தப்பட்டதால் அதில் பயணம் செய்த பயணிகளுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றிய விவரம் தெரியவந்ததும் பயணிகளிடையே அமைதி நிலவியது.
அதன் பிறகு சுமார் 18 நிமிடங்கள் கழித்து மதியம் 12.38 மணிக்கு ரெயில் விரிகோட்டில் இருந்து புறப்பட்டு சென்றது.
போக்குவரத்து பாதிப்பு
விரிகோட்டில் ரெயில் நின்ற நேரத்தில் குழித்துறை-இரணியல் இடையே வேறு ரயில் போக்குவரத்து இல்லாததால் மற்ற ெரயில் போக்குவரத்துகளில் எந்த வித தடையும் ஏற்படவில்லை.
அதேநேரம் ரயில் நிறுத்தப்பட்ட விரிகோடு ரயில்வே கேட் அந்த நேரத்தில் மூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் சாலையின் குறுக்கே ரெயில் நின்றதால் மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இதனால் அந்த சாலை வழியாக செல்ல வேண்டிய கார்கள், பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் போன்றவை செல்ல முடியாமல் அங்கு நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அந்த சாலை வழியாக நடந்து செல்ல வேண்டியவர்களும் செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.
Related Tags :
Next Story