அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா கலெக்டர் விஷ்ணு தகவல்
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
நெல்லை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் அம்பை, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் நடக்கிறது. 621 வாக்குச்சாவடிகளில் பதற்றமான 182 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு வீடியோபதிவும் செய்யப்படுகிறது. நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் இந்த வெப்கேமரா செயல்படும் விதம் குறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அதை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கலெக்டர் பேட்டி
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) அம்பை, சேரன்மாதேவி, மானூர், பாப்பாக்குடி, பாளையங்கோட்டை ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த வாக்குப்பதிவு 621 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.
இதில் பெண் வாக்குச்சாவடி 19, ஆண் வாக்குச்சாவடி 19, அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்ககூடிய வாக்குச்சாவடி 583.
பெண் வாக்காளர்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மாதிரி வாக்குச்சாவடி ஆக பயன்படுத்தப்படும். இந்த தேர்தலில் 5,307 அலுவலர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள். இதில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 42 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
கண்காணிப்பு
51 மண்டல அலுவலர்கள் இந்த வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகிறார்கள். 182 பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா மற்றும் வீடியோ பதிவு நுண் பார்வையாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தவிர கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு யூனியனுக்கும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு வசதியாக வீல்சேர் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க செல்பவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், அரசு ஊழியர்கள் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம்.
தேர்தல் வழக்கு
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமாக 98 புகார்கள் வந்துள்ளது. இதில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் நாங்குநேரி யூனியன் பகுதியில் ரூ.40 ஆயிரமும், மானூர் யூனியன் பகுதியில் ரூ.4 லட்சத்து 7 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
Related Tags :
Next Story