ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது வாகனம் மோதி விவசாயிகள் சிலர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான மத்திய இணை மந்திரி, அவருடைய மகன் மற்றும் அவரது தரப்பினரை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நீதி கேட்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை, மத்திய பிரதேச மாநில அரசு தடுத்து நிறுத்தி அவரை வீட்டுக்காவலில் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று ஓசூர் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரோஜா, கட்சி நிர்வாகிகள் வீர.முனிராஜ், அசேன், பிரவீன், மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு உத்தரபிரதேச அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் திடீரென அவர்கள் சாலை நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓசூர் டவுன் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல், பிரியங்கா காந்தியை வீட்டுக்காவலில் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, ஓசூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே, மாநகர தலைவர் நீலகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாநில விவசாய பிரிவு ஒருங்கிணைப்பாளர் சூரியகணேஷ், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சாதிக் கான், நகர செயலாளர் சந்திரசேகர், கொத்தூர் முனிராஜ் உள்பட கட்சியினர் கலந்து கொண்டு உத்தரபிரதேச அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story