குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தாய் மகன் தற்கொலை - தொழில் அதிபருக்கு தீவிர சிகிச்சை
பரமத்திவேலூரில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். தொழில் அதிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, சேடர் தெருவை சேர்ந்தவர் சையத் அக்பர் (வயது 60). தொழில்அதிபர். இவரது மனைவி பாத்திமாபேகம் (55). இவர்களுக்கு சிக்கந்தர் (33), பர்கத் (30) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் சிக்கந்தர் தற்போது லண்டனில் வேலை செய்து வருகிறார். பர்கத் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்தார்.
சையத் அக்பர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டர் டிரைலர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். மேலும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வெங்காய மண்டி வைத்து வியாபாரம் செய்து வந்தார். ஆனால் இதிலும் போதிய வருமானம் இல்லை. எனவே தொழில் நஷ்டத்தால் அவர் மனமுடைந்து இருந்து வந்தார். இதனால் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த நிலையில் 4-ந்தேதி இரவு சையத்அக்பர் குளிர்பானத்தில் விஷம் கலந்து மனைவி பாத்திமா பேகம், மகன் பர்கத் ஆகியோருடன் குடித்தார். இதையடுத்து 3 பேரும் வீட்டில் மயங்கி விழுந்தனர். இதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 3 பேரையும் உறவினர்கள் மீட்டு பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் பாத்திமாபேகம், மகன் பர்கத் ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சையத் அக்பருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தாய்-மகன் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் தாய், மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story