மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா வாலிபர் பலி


மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2021 11:49 AM IST (Updated: 6 Oct 2021 11:49 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா வாலிபர் பலியானார். மாயமான ஐ.டி.ஐ மாணவர் உடல் நேற்று கரை ஒதுங்கியது.

சென்னை,

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சாய் (வயது 25). பழைய துணிகளை வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று சென்னையில் பழைய துணிகளை வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது சாய் தனது நண்பர்களான கோபால், ஹரி ஆகியோருடன் மெரினா கடற்கரையில் எழிலகம் எதிரே உள்ள பகுதிக்கு நேற்று காலை வந்தார். அங்கு அவர் தனது நண்பர்களுடன் கடலில் குதுகலமாக குளித்தார்.

அப்போது அங்கு எழுந்த ராட்சத அலையில் சிக்கி சாய் மாயமானார். இதுகுறித்து அவரது நண்பர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் சாய் உடல், அந்தப் பகுதியில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல், சென்னை புளியந்தோப்பு கோவிந்த்சிங் தெருவைச் சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் சரவணன் (22) நேற்று முன்தினம் தன்னுடன் படிக்கும் மாணவர்களான பூபாலன், ஜீவா, தமிழரசன், கிஷோர் உள்பட 6 பேருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். அங்கு கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடற்பரப்பில் நண்பர்களிடம் சேர்ந்து சரவணன் குளித்தார். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி 3 தத்தளித்தனர்.

இதைக்கண்ட அங்கிருந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் ஜீவா, பூபாலனை உடனடியாக காப்பாற்றினர். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரவணனை மீட்க முயன்றனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் கடலில் மூழ்கி மாயமாகிவிட்டார். இதையடுத்து, போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் சரவணனை தேடத் தொடங்கினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று காலை அண்ணா சதுக்கம் பகுதியில் சரவணன் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடற்கடைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட ஆகஸ்டு 23-ந் தேதியிலிருந்து இதுவரை 11 பேர் மெரினாவில் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story