செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை: கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2021 12:46 PM IST (Updated: 6 Oct 2021 12:46 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, நந்திவரம், பெருமாட்டுநல்லூர், கன்னிவாக்கம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், ஊரப்பாக்கம், வண்டலூர், மண்ணிவாக்கம், வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், காயரம்பேடு, களிவந்தபட்டு, உள்பட பல்வேறு கிராமங்களில் நேற்று காலை 8 மணி முதல் விட்டுவிட்டு தொடர்ந்து கன மழை பெய்தது.

இதனால் கூடுவாஞ்சேரி சர்வீஸ் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் நெல்லிக்குப்பம் சாலையில் பெருமாட்டுநல்லூர் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டனர். மேலும் விட்டுவிட்டு தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரி, குளங்களில் நீர் நிரம்பி உள்ளது. ஒரு சில குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. குறிப்பாக கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் உள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் கால்வாய் இருந்தும் மழைநீர் செல்வதற்கு வழி இல்லை, எனவே மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. காஞ்சீபுரம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நாட்களாக சின்ன காஞ்சீபுரம் பகுதியில் அமைந்துள்ள ரங்கசாமி குளம் வறண்டு காணப்பட்டது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக தற்போது ரங்கசாமிகுளம் முழுவதும் மழை வெள்ளத்தால் நிரம்பி ரம்மியமாக காட்சியளித்தது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை, ஒரகடம் மணிமங்கலம், வரதராஜபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை தொடங்கிய மழை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

Next Story