கேளம்பாக்கம் அருகே, துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை - பணி சுமையால் இறந்ததாக போலீசில் புகார்


கேளம்பாக்கம் அருகே, துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை - பணி சுமையால் இறந்ததாக போலீசில் புகார்
x
தினத்தந்தி 6 Oct 2021 1:14 PM IST (Updated: 6 Oct 2021 1:14 PM IST)
t-max-icont-min-icon

கேளம்பாக்கம் அருகே துப்பாக்கியால் சுட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டார். பணி சுமையால் இறந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 59). சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். அவரது மனைவி லலிதா (55), மகன்கள் சாய் முகிலன் (27), சாய் சித்தார்த் (16).

தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

பாட்னா ஐகோர்ட்டு நீதிபதி அணில்குமார் உடல்நலக்குறைவால் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறப்பு போலீசாக பணியாற்றி வந்த கவுதம் இரவு பணி முடித்து நேற்று அதிகாலை கேளம்பாக்கம் அடுத்த மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ள வீட்டுக்கு சென்றார்.

மனைவியிடம் மீண்டும் காலை 7 மணிக்கு பணிக்கு செல்ல இருப்பதாக கூறி விட்டு சிறிது நேரம் தூங்கிய கவுதம் மீண்டும் காலை பணிக்கு செல்ல தயாரானார். மனைவியிடம் காபி கேட்டார். அப்போது திடீரென்று வெடி சத்தம் கேட்கவே அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது கவுதம் தான் பயன்படுத்தும் துப்பாக்கியால் காதுக்கு மேல் பகுதியில் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகன் இது குறித்து தாழம்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கவுதமின் மனைவி தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், பணி சுமை காரணமாக கவுதம் மன உளைச்சலில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் அடிப்படையில் தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story