தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற தோணி நடுக்கடலில் மூழ்கியது- 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு


தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற தோணி நடுக்கடலில் மூழ்கியது- 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 7:40 PM IST (Updated: 6 Oct 2021 7:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற தோணி நடுக்கடலில் மூழ்கியது. அதில் இருந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சென்ற தோணி நடுக்கடலில் மூழ்கியது. அதில் இருந்த 9 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தோணி

தூத்துக்குடியை சேர்ந்த அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய வென்னிலா என்ற தோணி மூலம் மாலத்தீவுக்கு சிமெண்டு, காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த 2-ந் தேதி மொத்தம் 287 டன் சரக்குகளுடன் தோணி மாலத்தீவு நோக்கி புறப்பட்டது.
இந்த தோணியின் மாஸ்டர் தூத்துக்குடியை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது 49) தலைமையில், தொழிலாளர்கள் மரிய அந்தோணி (23), சிரான் (26), சீலன் (25), மில்டன் (50), நாராயணன் (61), அடைக்கலம் (63), வெசேந்தி (61), தொம்மை (63) ஆகிய 9 பேர் அதில் சென்றனர்.

பலத்த காற்று

இந்த தோணி நேற்று முன்தினம் காலையில் மாலத்தீவில் இருந்து சுமார் 250 கடல்மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அங்கு கடலில் பலத்த காற்று வீசியது. இதனால் தோணியை தொடர்ந்து செலுத்த முடியாமல் தொழிலாளர்கள் திணறினர். தொடர்ந்து வீசிய பலத்த காற்று காரணமாக தோணிக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கையாக தோணியில் இருந்த சில சரக்கு மூட்டைகளை எடுத்து கடலில் வீசினர். அதன்பிறகும் காற்றை மீறி தோணியை செலுத்த முடியவில்லை.
இதனால் அவர்கள் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்புவதற்கு முடிவு செய்தனர். பின்னர் தூத்துக்குடியை நோக்கி தோணியை செலுத்தினர். நேற்று முன்தினம் மாலையில் கன்னியாகுமரியில் இருந்து சுமார் 130 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது தோணியின் என்ஜின் அறைக்குள் கடல் தண்ணீர் புகுந்தது. இதனால் தோணியை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் தோணி மெல்ல, மெல்ல கடலில் மூழ்க தொடங்கியது.

தேடுதல் வேட்டை

இதனால் தொழிலாளர்கள் தோணியில் இருந்த அவசரநிலை தொலைத்தொடர்பு சாதனம் மூலம் சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கும், தோணி உரிமையாளர்கள் சங்கத்துக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில், கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
அதே நேரத்தில் தோணியின் உரிமையாளர், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கும் தகவல் தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. தோணி தொழிலாளர்களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளார். இதனால் கடலோர காவல்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

பத்திரமாக மீட்பு

அப்போது, இலங்கையில் இருந்து மாலத்தீவு நோக்கி ஒரு சரக்கு பெட்டக கப்பல் சென்று கொண்டு இருந்தது. அந்த கப்பல் மூழ்கி கொண்டிருந்த தோணி இருந்த பகுதியின் அருகே சென்று கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக தொழிலாளர்களை மீட்பதற்கு, அந்த சரக்கு பெட்டக கப்பலுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதன்பேரில், சரக்கு பெட்டக கப்பலில் இருந்த ஊழியர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 9 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்டனர். தோணி அதே இடத்தில் கைவிடப்பட்டது. மீட்கப்பட்ட 9 தொழிலாளர்களும் மாலத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விரைவில் தூத்துக்குடிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கனிமொழி எம்.பி.க்கு நன்றி

மேலும், தோணி தொழிலாளர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்.பி. மற்றும் அலுவலர்களுக்கு தோணி உரிமையாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Next Story