முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; 15-ந் தேதி சூரசம்ஹாரம்


முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது; 15-ந் தேதி சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 6 Oct 2021 7:55 PM IST (Updated: 6 Oct 2021 7:55 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.

தசரா திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் ைமசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை முன்செல்ல கொடிப்பட்டம் கோவில் பிரகாரத்தில் வலம் வந்தது. தொடர்ந்து காலை 9.42 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

பக்தர்களின்றி எளிமையாக...

பின்னர் கொடிமர பீடத்திற்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடிமர பீடமானது தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி தசரா திருவிழா கொடியேற்றம் எளிமையாக நடந்தது. இதனால் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து காட்சி அளித்தார்.

15-ந்தேதி சூரசம்ஹாரம்

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவிலின் முன்பாக நடைபெறுகிறது. 11-ம் திருநாளான 16-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலையில் மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மாலையில் அம்மன் கோவிலை வந்தடைந்ததும் காப்பு களைதல் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பாலாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

இன்று பக்தர்களுக்கு அனுமதி

2-ம் திருநாளான இன்றும் (வியாழக்கிழமை), வருகிற 6 முதல் 9-ம் திருவிழா நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். 3, 4, 5, 10, 11, 12-ம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
விரதம் இருந்து வேடம் அணியும் பக்தர்களுக்காக, கோவிலில் இன்று (வியாழக்கிழமை) காப்புகள் வழங்கப்படுகிறது. தசரா குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப மொத்தமாகவும் கோவில் அலுவலகத்தில் காப்புகள் வழங்கப்படுகிறது.
கையில் காப்பு கட்டிய பின்னர் வேடம் அணியும் பக்தர்கள் உள்ளூர்களிலேயே காணிக்கை வசூலிக்குமாறும், சூரசம்ஹாரத்துக்கு பின்னர் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களிலேயே காப்புகளை களையுமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story