கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு


கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 6 Oct 2021 8:05 PM IST (Updated: 6 Oct 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

ஊட்டி

நீலகிரியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இடைத்தேர்தல்

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நாளை மறுநாள்(சனிக்கிழமை) நடைபெறுகிறது. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் மசினகுடி ஊராட்சியில் வார்டு எண் 4-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், சேரங்கோடு ஊராட்சியில் வார்டு எண் 11-ல் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினர் என 3 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் 5 பேர் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றனர். சேரங்கோடு ஊராட்சியில் 6 பேர், மசினகுடி ஊராட்சியில் 6 பேர், நடுஹட்டி ஊராட்சியில் 3 பேர் என மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையொட்டி 3 இடங்களில் 13 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பாதுகாப்பு உபகரணங்கள்

இந்த நிலையில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் பயன்படுத்த முககவசங்கள், கையுறைகள், வாக்காளர்களுக்கு வழங்கும் கையுறைகள், பிளாஸ்டிக் வாளிகள், முழு பாதுகாப்பு கவச உடைகள் என 13 வகையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உடன் இருந்தார்.

கொரோனா நோயாளிகள்

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
நீலகிரியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் 13 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அங்கு குடிநீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதை தடுக்கவும், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும் 8 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்றனர்.


Next Story