அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க நடவடிக்கை


அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2021 8:05 PM IST (Updated: 6 Oct 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடியில் 12-வது நாளாக ஆட்கொல்லி புலியை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்தது. அதனை அறிவியல் பூர்வமாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறினார்.

கூடலூர்

மசினகுடியில் 12-வது நாளாக ஆட்கொல்லி புலியை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்தது. அதனை அறிவியல் பூர்வமாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் கூறினார்.

12-வது நாளாக தேடுதல் வேட்டை

நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி உள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்க நேற்று 12-வது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த பணியில் தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தலைமையில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் ஈடுபட்டனர். 

சிங்காரா, ஹல்லல்லா, மன்றாடியார் உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் வேட்டை நடத்தினர். மாடுகளை கட்டி வைத்தும், மரங்களில் பரண்கள் அமைத்தும் கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி துப்பாக்கிகளுடன் கண்காணித்தனர். இது தவிர புலியை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் தெர்மல் கேமரா டிரோன்களை பறக்க விட்டு தேடுதல் வேட்டை நடத்தினர்.

அறிவியல் பூர்வமாக...

இதற்கிடையில் மாலை 3.30 மணிக்கு மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் வனத்துறையினர்  கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். மாலை 6 மணி ஆகியும் புலி குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

முன்னதாக தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
அந்த புலி 4 பேரை கொன்றது தொடர்பாக அறிவியல் பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது. அதை பிடிக்க தினமும் புதிய வியூகங்கள் வகுத்து செயல்படுத்தப்படுகிறது. சிங்காரா வனப்பகுதியில் அந்த புலியின் தடங்கள் இருந்ததால், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வயது முதிர்ச்சி காரணமாக வேட்டையாடுவதில் சிரமங்கள் ஏற்பட்டு இருக்கலாம். அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக 6 கால்நடை டாக்டர்கள் பணியில் உள்ளனர்.

ரேடியோ காலர்

தேடப்படும் புலியை ஆட்கொல்லி என்று கூற முடியாது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் மூலம் கண்காணிக்கப்படும். அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். தேடப்படும் புலியால் ஏற்பட்ட 4 மரணங்களில், முதல் 2 மரணங்கள் புலியால் நடந்தது என்பது உறுதியாகவில்லை. இதனை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் அது மனரீதியாக பாதிக்கப்படும். அதை சரி செய்து விட முடியும். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

காடுகளில் வாழும் புலி சராசரியாக 14 ஆண்டுகள் வரை வாழ்கிறது. ஆனால் வன உயிரின பூங்காக்களில் பாதுகாக்கும்போது கூடுதலாக 10 ஆண்டுகள் உயிருடன் இருக்கும். வேட்டை தடுப்பு காவலர்களின் சம்பளத்தை 12 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வன அலுவலர் போஜலே சச்சின் துக்காராம், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன், ராஜேந்திரன், முரளி மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story